விபத்து வாகன விவகாரம்: வவுனியா வடக்கு தவிசாளர் – செயலாளர் இடையே முரண்பாடு; பொலிசில் முறைப்பாடு பதிவு!

63

வவுனியா வடக்கு பிரதேச சபை தவிசாளர் தி. கிருஸ்ணவேணி, விபத்துக்குள்ளான சபை வாகனத்தை தனது நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த அனுமதி வழங்கப்படவில்லை எனக் கூறி புளியங்குளம் பொலிசில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

இன்று (26.05) இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கடந்த 21ஆம் திகதி அதிகாலை கரப்புக்குத்தி – விஞ்ஞானகுளம் பகுதியில் கட்டுக்காலி மாடுகளை பிடிக்கும் நடவடிக்கை தவிசாளர் தலைமையில் முன்னெடுக்கப்பட்டபோது, அதிகாலை 2.20 மணியளவில் மாடு ஒன்று மோதி வாகனம் விபத்துக்குள்ளானது.

இதையடுத்து, சேதமடைந்த வாகனத்தை திருத்துவதற்காக விபத்து தொடர்பான அறிக்கைகள் மற்றும் ஆவணங்கள் மூன்று நாட்களுக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என நடைமுறை உள்ளது. அதன்படி,

விபத்து நடைபெற்ற இட விவரம்

விபத்து அறிக்கை

திருத்த மதிப்பீட்டு அறிக்கை

பொலிஸ் உறுதிப்படுத்தல்

காப்புறுதி மதிப்பீட்டு அறிக்கை

சாரதி அறிக்கை

வாகனத்தை பயன்படுத்திய தவிசாளரின் அறிக்கை

என்பன சமர்ப்பிக்கப்பட வேண்டியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், இன்று (26.05) நண்பகல் 12.30 மணி வரை குறித்த அறிக்கைகள் வழங்கப்படவில்லை என பிரதேச சபை செயலாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், “தனக்கு கீழ் பணிபுரிபவர்களுக்கு அறிக்கை வழங்க முடியாது” என தவிசாளர் மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால், வாகனம் இதுவரை திருத்தப்படாமல் இருப்பதுடன், தேவையான அனுமதிகள் இன்றி வாகனத்தை பயன்படுத்த செயலாளர் அனுமதி வழங்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தவிசாளர் புளியங்குளம் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.