வலுக்கட்டாயமாக உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் இருந்து அகற்றப்பட்டாரா சோனம் வாங்சுக்?

68

இந்தியாவின் முன்னணி ஆர்வலரும் கல்வியாளருமான சோனம் வாங்சுக், உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் இருந்து நேற்று (18) காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கல்வி சீர்திருத்தங்களை வலியுறுத்தி புதுடெல்லியில் கடந்த 20 நாட்களாக அவர் உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.

இந்தநிலையில், டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில், வாங்சுக்கின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு மருத்துவ சிகிச்சையளிப்பதற்காகவே அவர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

போராட்ட இடத்தில் இருந்த காவல்துறையினர், வாங்சுக்கை துணிகளால் மூடி வலுக்கட்டாயமாக நோயாளர் காவு வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வாங்சுக், தற்போது விழிப்புடனும் உடல்நிலை சீராகவும் இருப்பதாக மருத்துவமனை தரப்பு தெரிவித்துள்ளது.

நீண்ட நாள் உணவுத்தவிர்ப்பால்,அவர் சற்று பலவீனமாகவும், லேசான நீர்ச்சத்து குறைபாட்டுடனும் இருந்தாலும், அவரது முக்கிய உடல் நிலைகள் சீராக உள்ளன.

இந்தநிலையில், தனது கணவரின் அனுமதியின்றி அவருக்கு எந்த மருந்தையும் வழங்கக்கூடாது என்று வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி அங்க்மோ, தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

வாங்சுக் போராட்ட இடத்திலிருந்து அகற்றப்பட்டாலும், திட்டமிட்டபடி வரும் 20-ஆம் திகதியன்று நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணி நடைபெறும் என்று கொக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் டிப்கே அறிவித்துள்ளார்.

வாங்சுக்கிற்குப் பதிலாக டிப்கே தற்போது காலவரையற்ற உணவுத்தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

கல்வித் துறை பரீட்சைகளில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.