யாழ். நூலக எரிப்புக்கு இன்றுவரை நீதி இல்லை: இலங்கோ குமரன் குற்றச்சாட்டு.!!

86

யாழ்ப்பாண நூலக எரிப்பு மற்றும் 1983 ஆம் ஆண்டு இனக்கலவரம் ஆகியவை தானாகத் தோன்றியவை அல்லவென்றும், அரசியல் லாபத்திற்காக திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை என்றும் பாராளுமன்ற உறுப்பினர் இலங்கோ குமரன் குற்றம் சாட்டியுள்ளார்.

பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது உரையாற்றிய அவர், மக்கள் மத்தியில் இனவாதம் கிடையாது என்றும், அரசியல் லாபத்திற்காகவே அது உருவாக்கப்பட்டது என்றும் சுட்டிக்காட்டினார். 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இடம்பெற்ற இந்தக் கலவரத்தைத் தடுக்க அன்றைய ஆட்சியாளர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்.

கலவரம் முடிவடைந்து 43 ஆண்டுகள் கடந்தும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று வரை நீதி கிடைக்கவில்லை என்று வேதனை தெரிவித்த அவர், தங்களை பிரதிநிதித்துவப்படுத்திய எவரும் இதற்காகப் பூரணமான குரல் கொடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.

மக்களின் வாக்குரிமையை அன்று எரித்து சாம்பலாக்கியவர்கள்தான் இன்று எதிர்க்கட்சியில் அமர்ந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஒட்டுமொத்த மக்களும் தற்போதைய தேசிய மக்கள் சக்தியின் மீது நம்பிக்கை கொண்டுள்ளதாகவும், இந்த ஆட்சியின் ஊடாகவே இதற்கான உண்மையான தீர்வு கிடைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். எதிர்காலத்தில் இதுபோன்ற வன்முறைகள் மீண்டும் நிகழாமல் இருக்க, கறுப்பு நாளுக்குரிய நீதியைப் பெற்றுக்கொடுத்து நியாயமானதொரு எதிர்கால சந்ததியை உருவாக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.