மோசமடைந்து வரும் சலேவின் உடல்நிலை – ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

71

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவின் உடல்நிலை மோசமடைந்து வருவது குறித்து ஜனாதிபதி உடனடியாகவும் அவசரமாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உலகளாவிய இலங்கை மன்றம் (Global Sri Lankan Forum – GSLF) தெரிவித்துள்ளது.

உலகளாவிய இலங்கை மன்றம் ஜனாதிபதிக்கு கடிதமொன்றினை அனுப்பி இதனை தெரிவித்துள்ளது.

அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சுரேஷ் சலேவை நீண்ட கால காவலில் வைப்பதற்குப் பதிலாக, வெளிப்படையான நீதித்துறை நடவடிக்கைகள் மூலம் அவர் மீதான விசாரணையை விரைவுபடுத்த வேண்டும் என்றும் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், சுரேஷ் சலேவின் தடுப்புக்காவல் மற்றும் மோசமடைந்து வரும் அவரது உடல்நிலை குறித்து ஜனாதிபதி உடனடியாகவும் அவசரமாகவும் கவனம் செலுத்த வேண்டும் என்றும், மனிதாபிமான அடிப்படையில் தலையிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உயர்மட்ட இராணுவ அதிகாரியாக இலங்கையின் இறையாண்மை மற்றும் தேசியப் பாதுகாப்பைப் பேணுவதற்காக சுரேஷ் சலே தனது வாழ் நாளின் பல பத்தாண்டுகளை அர்ப்பணித்துள்ளார் என்பதைச் சுட்டிக்காட்டி, முறையான குற்றச்சாட்டு இல்லாமல் எந்தவொரு நபரும் நீண்டகால தடுப்புக்காவலில் வைக்கப்படக்கூடாது என்று உலகளாவிய இலங்கை மன்றம் கூறுகின்றது.

அதன்படி, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள சலேவுக்கு ஏதேனும் துரதிர்ஷ்டவசமான சூழ்நிலை ஏற்பட்டால், அத்தகைய விளைவுக்கான பொறுப்பு, உத்தரவைப் பிறப்பித்த அதிகார அமைப்பான உங்கள் நிர்வாகத்தின் மீது சுமத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

எனவே, சுரேஷ் சலேவுக்கு மிக உயர்ந்த அளவிலான மருத்துவ சிகிச்சை தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யவும், அவரது பாதுகாப்பைக் கடுமையாக உறுதி செய்யுமாறும் கோரியுள்ளது.