முறிந்தது ஒப்பந்தம்? : மீண்டும் சூடுபிடிக்கும் அமெரிக்கா-ஈரான் மோதல்!

118
ஹோர்முஸ் நீரிணையில் மூன்று வர்த்தகக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரான் மீது அமெரிக்கா சக்திவாய்ந்த வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்னதாக, சர்வதேச கடற்பாதையில் பயணித்த பொதுமக்கள் பணியாற்றிய வர்த்தகக் கப்பல்களை இலக்காகக் கொண்ட தாக்குதல்களுக்கு கடுமையான விலையை விதிக்கும் நோக்கிலேயே ஈரான் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் தெரிவித்துள்ளது.
எனினும், கடந்த மாதம் கையெழுத்திடப்பட்ட அமெரிக்கா மற்றும் ஈரான் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இந்தத் தாக்குதல் மீறுவதாக ஈரானின் பிரதி வெளிவிவகார அமைச்சர் குற்றஞ்சாட்டியுள்ளதுடன், இதற்கு ஈரான் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.
அத்துடன், கெஷ்ம் தீவு, பந்தர் அப்பாஸ் மற்றும் சிரிக் ஆகிய பகுதிகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக ஈரானின் அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தாக்குதல்களில் பறந்த சிதறல் துண்டுகளால் பலர் காயமடைந்துள்ள போதிலும், உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஹோர்முஸ் நீரிணையில் இடம்பெற்ற கப்பல் தாக்குதல்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை எனக் குறிப்பிட்டிருந்த அமெரிக்கா, அதற்கு விளைவுகள் ஏற்படும் என முன்னரே எச்சரித்திருந்தது.
மேலும், தாக்குதல்களுக்கு முன்னதாக, ஈரான் மீதான எண்ணெய் தடைகளில் தற்காலிக தளர்வை வழங்கியிருந்த விலக்கை அமெரிக்க நிதியமைச்சு நேற்று இரத்து செய்துள்ளது.
எனினும், இது புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறும் நடவடிக்கை என ஈரானின் வெளிவிவகார அமைச்சு குற்றஞ்சாட்டியுள்ளது.
அத்துடன், இந்த நடவடிக்கை அமெரிக்க அரசின் நம்பகத்தன்மையின்மை, முரண்பாடான அணுகுமுறை மற்றும் நல்லெண்ணமின்மையை வெளிப்படுத்துவதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், தேசிய நலன்களையும் தேசியப் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.