மன்னார் கடலில் படகு மோதல்: மீனவர் உயிரிழப்பு, ஒருவர் காயம்.!

119

மன்னார் வங்காலைப்பாடு கடற்பகுதியில் புதன்கிழமை (15) அதிகாலை இடம்பெற்ற படகு விபத்தில் மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை சுமார் 4.00 மணியளவில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த இரண்டு மீன்பிடிப் படகுகள் எதிர்பாராத விதமாக ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

வங்காலைப்பாடு மற்றும் காட்டாஸ்பத்திரி பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களின் படகுகள் மோதியதில், இரு படகுகளும் கடுமையாக சேதமடைந்ததுடன், அதில் இருந்த மீனவர்கள் கடலில் தூக்கி வீசப்பட்டனர்.

இதில் ஒருவர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டதோடு, காணாமல் போன மற்றொரு மீனவர் நீண்ட தேடுதலின் பின்னர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

உயிரிழந்தவர் காட்டாஸ்பத்திரி பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

காயமடைந்த மீனவர் மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவ இடத்திற்கு பொலிஸாரும் மீன்பிடித் திணைக்கள அதிகாரிகளும் விரைந்து சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த துயர சம்பவம் மன்னார் மீனவ சமூகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், விபத்திற்கான காரணம் குறித்து மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.