மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற சீனியை புதிய பொதிகளில் அடைத்து விற்பனை மோசடி

70

காலாவதியான மற்றும் மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற சீனியை புதிய பொதிகளில் அடைத்து, சட்டவிரோத மதுபான உற்பத்திக்கு விற்பனை செய்து வந்த பாரிய மோசடி ஒன்றினை, மத்திய ஊழல் தடுப்புப் படையினரும் நுகர்வோர் விவகார அதிகார சபையினரும் இணைந்து முறியடித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் களஞ்சியசாலையின் முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், வலான மத்திய ஊழல் தடுப்புப் படையின் பொறுப்பதிகாரி இந்திக்க வீரசிங்கவின் வழிகாட்டுதலின் கீழ் இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரிகளுடன் இணைந்து நடத்திய இந்த அதிரடி சோதனையின் போது, அங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்த காலாவதியான சீனி, புதிய பொதிகளில் அடைக்கப்பட்டு, காலாவதியாகும் திகதி மற்றும் பெயர் மாற்றப்பட்டு சந்தைக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்த சோதனையைத் தொடர்ந்து, நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட சீனி கிடங்கிற்கு முழுமையாகச் சீல் வைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மத்திய ஊழல் தடுப்புப் படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.