பேஸ்லைன் வீதி அபிவிருத்திப் பணிகளில் தாமதம் ஏன்? கொழும்பு மாநகர சபை விளக்கம்.

26

கொழும்பு பேஸ்லைன் வீதியில் முன்னெடுக்கப்படும் நிலத்தடி கழிவுநீர் வலையமைப்புத் திட்டங்களின் கட்டுமானப் பணிகள் தாமதமடைவதற்கான காரணங்களை கொழும்பு மாநகர சபை விளக்கியுள்ளது. நிலத்துக்கு அடியில் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள மின்சாரக் கம்பிகள், குடிநீர்க் குழாய்கள், தொலைத்தொடர்பு இணைப்புகள் மற்றும் மழைநீர் வடிகால் கட்டமைப்புகளைத் துல்லியமாகக் கண்டறிவதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக மேயர் தெரிவித்துள்ளார்.

கிருலப்பனை மற்றும் கிருலா–நாரஹேன்பிட்டிய பகுதிகளில் முன்னெடுக்கப்படும் இந்த இரண்டு திட்டங்களுக்கும் மொத்தம் சுமார் 25 பில்லியன் ரூபாய் செலவிடப்படவுள்ளது. சம்பந்தப்பட்ட சேவை வழங்கும் நிறுவனங்களுடன் இணைந்து நிலத்தடி கட்டமைப்புகளை அடையாளம் காணும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அவற்றை உறுதிப்படுத்தாமல் அகழ்வுப் பணிகளைத் தொடர்வது அத்தியாவசியச் சேவைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என மாநகர சபை சுட்டிக்காட்டியுள்ளது.

பேஸ்லைன் வீதியிலுள்ள குழாய் அமைப்புப் பணிகளை 2026 டிசம்பருக்குள் நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கிருலப்பனைத் திட்டம் 2027 டிசம்பரிலும், கிருலா–நாரஹேன்பிட்டிய திட்டம் 2028 ஆகஸ்டிலும் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்டுமானப் பணிகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் பொதுமக்களுக்கான அசௌகரியங்களுக்கு மாநகர சபை வருத்தம் தெரிவித்துள்ளது.