புகையிரதத்தில் பாய்ந்து இராணுவச் சிப்பாய் உயிரிழப்பு!

62

யாழ்ப்பாணம் நெளுக்குளம் பகுதியில் இன்று இடம்பெற்ற துயரச் சம்பவத்தில், புகையிரதத்துடன் மோதி இராணுவச் சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் பலாலி இராணுவ முகாமில் கடமையாற்றி வந்த பகலகம பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய நிரோஷன் லக்மால் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் படி, குறித்த சிப்பாய் விடுமுறைக்காக தனது சொந்த ஊருக்குச் சென்றிருந்த நிலையில், விடுமுறை காலம் முடிவடைந்த பின்னரும் நீண்டகாலமாக கடமைக்குத் திரும்பாதிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், இன்று மீண்டும் பலாலி இராணுவ முகாமுக்கு வந்த அவரிடம், நீண்டகாலமாக கடமையில் சமூகமளிக்காதது தொடர்பில் கொழும்பில் அமைந்துள்ள இராணுவத் தலைமையகத்தில் விளக்கமளிக்குமாறு அதிகாரிகள் பணித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து முகாமிலிருந்து வெளியேறிய அவர், அரியாலை – நெளுக்குளம் பகுதியில் புகையிரதத்துடன் மோதி உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.