பிலிப்பைன்ஸ் கப்பலில் பயங்கர தீ! 35 பேர் பலி

83

பிலிப்பைன்ஸ் கடற்பரப்பில் பயணிகள் கப்பல் ஒன்றில் ஏற்பட்ட பாரிய தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 50க்கும் மேற்பட்ட பயணிகள் காணாமல்போயுள்ள நிலையில், அவர்களை தேடும் மீட்புப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

130க்கும் அதிகமான பயணிகளுடன் பயணித்த ‘எம்.வி. ஜூன் ஆஸ்டர்’ என்ற கப்பல், சுமார் 20 மணிநேர பயணத்தை நிறைவு செய்யும் தருவாயில் பலவான் மாகாணத்தின் கோரோன் கடற்பகுதிக்கு அருகில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென தீப்பற்றியுள்ளது.

தீ வேகமாக பரவியதைத் தொடர்ந்து கப்பலில் இருந்தவர்களை மீட்கும் நடவடிக்கை அவசரமாக முன்னெடுக்கப்பட்டது. தீயணைப்புப் படையினர் நீண்ட போராட்டத்தின் பின்னர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

கப்பலின் கீழ்தளப் பகுதியில் இருந்து பல சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணிகளுக்காக தடயவியல் நிபுணர்கள் கோரோன் துறைமுகத்தில் தற்காலிக முகாம்களை அமைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கப்பலில் அடுத்தடுத்து இரண்டு வெடிப்புகள் ஏற்பட்டதைத் தொடர்ந்தே தீ மிக வேகமாக பரவியதாக உயிர் தப்பிய பயணிகள் தெரிவித்துள்ளனர்.

இதுவரை 43 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள போதிலும், கப்பலின் மாலுமியின் நிலைமை தொடர்பில் இதுவரை உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.

இந்த பேரழிவுக்கான காரணம் மற்றும் தீ விபத்து ஏற்பட்ட விதம் குறித்து பிலிப்பைன்ஸ் கடலோரக் காவல்படையினர் விரிவான விசாரணையை ஆரம்பித்துள்ளனர். காணாமல்போனவர்களை கண்டறியும் தேடுதல் நடவடிக்கைகளும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.