“பாலிநகர் பாடசாலையில் 60 ஆண்டு பழமையான மண்டபம் சேதம்: நாடளுமன்ற உறுப்பினர் நேரில்”

185

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், துணுக்காய் வலயக் கல்விப் பணிமனைக்கு உட்பட்ட மாந்தை கிழக்கு கோட்டக் கல்விப் பிரிவில் அமைந்துள்ள பாலிநகர் மகாவித்தியாலயத்திற்கு நேரில் சென்று அங்குள்ள வளப்பற்றாக்குறைகளை ஆய்வு செய்தார்.

402 மாணவர்கள் கல்வி கற்கும் இப்பள்ளிக்கான அங்கீகரிக்கப்பட்ட ஆசிரியர் எண்ணிக்கை 38 ஆக இருந்தாலும், தற்போது 29 ஆசிரியர்களே பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் கற்பித்தல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன என பள்ளி நிர்வாகம் சுட்டிக்காட்டியது.

மேலும், வெளிமாவட்டங்களில் இருந்து வருகை தரும் ஆசிரியர்கள் மற்றும் அதிபருக்கான தங்கும் வசதி இல்லாமை காரணமாக பல்வேறு இடர்பாடுகள் நிலவுகின்றன. இதனைத் தீர்க்க விடுதிகள் அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

அத்துடன், சுமார் 60 ஆண்டுகள் பழமையான, 210 அடி நீளமும் 25 அடி அகலமும் கொண்ட பிரதான மண்டபம் சேதமடைந்த நிலையில் காணப்படுவதாகவும், அதனை அவசரமாக சீரமைக்க வேண்டிய தேவை இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதற்கு மேலாக ஆசிரியர் பற்றாக்குறையை நிரப்புதல், பள்ளி சுற்றுவேலியை சீரமைத்தல், கட்டடங்களின் சேதமடைந்த கூரைகளைப் புதுப்பித்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.

இதனையடுத்து, குறைபாடுகள் தொடர்பான எழுத்துமூல கோரிக்கைகளை சமர்ப்பிக்குமாறு பள்ளி நிர்வாகத்தினரிடம் கேட்டுக்கொண்ட ரவிகரன் எம்.பி., அவற்றைத் தீர்க்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்தார்.