திருமணக் குழுவினர் சென்ற சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து விபத்து.!! 35 பேர் காயம்!

101

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கூத்தாட்டுகுளம் அருகே உள்ள காக்கூர் பகுதியில், திருமணக் குழுவினரை ஏற்றிச் சென்ற சுற்றுலாப் பேருந்து ஒன்று ஸ்கூட்டர் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் திடீரென திருப்பியதால் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 35 பயணிகள் படுகாயமடைந்தனர்.

நேற்று (ஆகஸ்ட் 27) காக்கூர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அங்குள்ள சிசிடிவி (CCTV) காட்சிகளின்படி, பேருந்து வந்து கொண்டிருந்த பாதையில் இருசக்கர வாகனம் ஒன்று திடீரென சாலையைக் கடக்க முயன்றது. அதன் மீது மோதிவிடக் கூடாது என்பதற்காக பேருந்து ஓட்டுநர் வாகனத்தை அதிவேகமாக திருப்பியுள்ளார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, அங்கிருந்த பெட்ரோல் பங்க் தூணில் மோதி பக்கவாட்டில் தலைகீழாக கவிழ்ந்தது.

விபத்து நடந்த உடனே அப்பகுதி மக்கள், தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்த 35 பேரும் உடனடியாக கூத்தாட்டுகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் நான்கு பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவ்விபத்து குறித்து உள்ளூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.