சிலாபம் பகுதியில் விபத்துக்குள்ளான மீன்பிடிப் படகு : கடற்றொழிலாளர் மாயம்.!

27

சிலாபம் முகத்துவாரத்தில் மீன்பிடிப் படகு ஒன்று விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து கடற்றொழிலாளர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று (20) காலை சுமார் 6.00 மணியளவில், ராஷ்மிகா புத்தா என அடையாளம் காணப்பட்ட படகில் இரண்டு கடற்றொழிலாளர்கள் இருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து குறித்த படகில் இருந்த கடற்றொழிலாளர்களில் ஒருவர் மீட்கப்பட்டதுடன் ஒருவர் காணாமல் போயுள்ள நிலையில் சிலாபம் காவல் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

சிலாபம் பகுதியைச் சேர்ந்த 67 வயது நபரே காணாமல் போயுள்ள நிலையில் அவரைக் கண்டுபிடிப்பதற்காக பல மீன்பிடிப் படகுகள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

குறித்த இரண்டு கடற்றொழிலாளர்களும் நேற்று (19) மதியம் சுமார் 1.00 மணியளவில் சிலாபம் பகுதியிலிருந்து கடலுக்குப் புறப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கடல் கொந்தளிப்பாக இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் மீண்டும் மீண்டும் அறிவுறுத்தியிருந்த போதிலும் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

மோசமான வானிலை எச்சரிக்கைகள் நடைமுறையில் இருக்கும்போது, கடற்றொழிலாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும், கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.