ஓமானில் உயிரிழந்த மர்மமான முறையில் வவுனியா இளம் தாய்.!

34

வவுனியா ஓமந்தையைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளின் தாயான சிந்துஜா, குடும்பத்தின் பொருளாதார சுமையை குறைக்கும் நோக்கில் வேலைக்காக ஓமான் சென்ற நிலையில் அங்கு உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. குடும்பத்தினரின் தகவலின்படி, அவர் தனது கணவருடன் வழக்கமாக தொலைபேசியில் தொடர்பில் இருந்ததுடன், கடந்த மாதம் 19 ஆம் திகதிக்குப் பின்னர் அவரிடமிருந்து எந்த அழைப்பும் வரவில்லை. பின்னர் அவர் உயிரிழந்ததாகவும், தவறான முடிவொன்றை எடுத்ததாகவும் குடும்பத்தினருக்கு தகவல் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழப்பு தொடர்பான தகவல் கிடைத்து இரண்டு வாரங்களுக்கும் மேலாகியுள்ள போதிலும், அவரது உடலை இலங்கைக்கு கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கணவர் தெரிவித்துள்ளார். சிந்துஜாவுக்கு உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்து குடும்பத்தினர் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, வெளிநாட்டு வேலைக்காக செல்லும் பெண்கள் முறையான முகவர்கள் ஊடாக மட்டுமே பயணிக்க வேண்டும் என்பதுடன், தங்களின் இருப்பிடம் மற்றும் தொடர்பு விபரங்களை குடும்பத்தினரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியமும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சிந்துஜாவின் உடலை விரைவாக தாயகத்திற்கு கொண்டு வருவதற்காக இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் ஓமானிலுள்ள இலங்கைத் தூதரகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், உயிரிழப்புக்கான காரணம் குறித்து ஓமான் அதிகாரிகளுடன் இணைந்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. தாயை இழந்த இரண்டு சிறு குழந்தைகள் அவரது உடல் தாயகம் திரும்புவதற்காக காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.