அநுராதபுரத்தில் ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் 35 வயது பெண் கைது.!!

69

அநுராதபுரம் மகா பாலடிகுளம் பகுதியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 35 வயதுடைய பெண் ஒருவர், பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் கைது செய்யப்பட்டுள்ளார். அநுராதபுரம் வலய மது ஒழிப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று (25.05.2026) இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. வீட்டைச் சுற்றிவளைத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சோதனையின் போது 127 கிராம் 100 மில்லிகிராம் அளவிலான ஐஸ் (Methamphetamine) போதைப்பொருளும், 121 கிராம் 100 மில்லிகிராம் ஹெரோயினும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், போதைப்பொருட்களை அளந்து சிறு பொதிகளாக பிரிக்க பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் மின்னணு தராசும் மீட்கப்பட்டுள்ளது. ஆரம்பகட்ட விசாரணைகளின் படி, குறித்த பெண் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக அல்லாமல், அந்தப் பகுதியில் போதைப்பொருள் விநியோகத்தில் முக்கிய பங்காற்றியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் பலர் இருக்கக்கூடும் என்ற கோணத்தில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, இவருக்குப் பின்னால் உள்ள பிரதான போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பை கண்டறியும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட பெண் அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.