அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வு எச்சரிக்கை.!

124

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கக்கூடும் என வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அந்தப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள மோதல்களால் விநியோகப் பாதைகளில் சிக்கல்கள் உருவாகியுள்ளதால், சந்தையில் விலை உயர்வு ஏற்படும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையில் பயன்படும் உருளைக்கிழங்கில் 80 சதவீதமும், வெங்காயத் தேவையில் 80 சதவீதமும், பருப்புத் தேவையில் 100 சதவீதமும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன என அமைச்சர் தெரிவித்தார். இதனால், சர்வதேச விநியோகச் சங்கிலியில் ஏற்படும் தடைகள் நேரடியாக உள்ளூர் சந்தை விலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இருப்பினும், சந்தையில் அநியாயமான முறையில் விலைகள் உயர்த்தப்படுவதைத் தடுக்க அரசாங்கம் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என அமைச்சர் உறுதியளித்துள்ளார். தற்போதைய சர்வதேச சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த அரசு தீவிரமாக செயல்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.