வவுனியா மாநகர சபை முறைகேடுகள்: நடவடிக்கை எடுக்க ஆளுநர் உத்தரவு.!!

117

வவுனியா, ஏப்ரல் 28 – வவுனியா மாநகர சபையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிர்வாகச் சீர்கேடுகள் மற்றும் நிதி முறைகேடுகள் தொடர்பில், ஓய்வுபெற்ற நீதிபதியின் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் உடனடி நடவடிக்கை எடுக்க வடக்கு மாகாண ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

மக்களின் வரிப்பணத்தை முறையற்ற வகையில் பயன்படுத்துவதைத் தடுக்கும் நோக்கில், சர்ச்சைக்குரிய வேலைத்திட்டங்களுக்கான கொடுப்பனவுகளை உடனடியாக நிறுத்தவும், சட்டவிரோத வரி வசூல்களை கைவிடவும் ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.

இதன்படி, வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் வவுனியா மாநகர சபை ஆணையாளருக்கு எழுத்துமூல பணிப்புரையை வழங்கியுள்ளார்.

திருநாவற்குளம் பகுதியில் இடம்பெற்ற கழிவுநீர் வாய்க்கால் தூர்வாரும் வேலைத்திட்டம் தொடர்பான விசாரணையில், சட்ட விதிமுறைகள் மீறப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த வேலைத்திட்டம் சபைத் தீர்மானமின்றி தனிநபர் விருப்பப்படி முன்னெடுக்கப்பட்டதுடன், கொடுப்பனவு கோரிய ஆவணங்களும் நம்பகத்தன்மையற்றவை என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால், அந்த திட்டத்திற்கான எந்தவொரு கொடுப்பனவும் வழங்கக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், வவுனியா பொலிஸ் நிலையம் முன்பாக உள்ள மாநகர சபை காணி சட்டவிரோதமாக வியாபாரிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அமைச்சரின் அனுமதி இன்றி, சபைத் தீர்மானம் இல்லாமல், அரச நடைமுறைகள் பின்பற்றப்படாமல், ஒப்பந்தமின்றி காணி வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து, சட்டவிரோதமாக வழங்கப்பட்ட காணிகளை மறுபரிசீலனை செய்யவும், எதிர்காலத்தில் சட்ட விதிமுறைகள் மற்றும் சபைத் தீர்மானங்களின் அடிப்படையில் மட்டுமே காணி வழங்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் மாற்று இடங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், சட்டபூர்வமற்ற காணிகளில் இயங்கும் வியாபாரிகளிடமிருந்து வசூலிக்கப்பட்டுவரும் வரிகளையும் உடனடியாக நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவுகளை உடனடியாக அமல்படுத்தி, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த முழுமையான அறிக்கையை இரண்டு வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு உள்ளூராட்சி ஆணையாளர் வவுனியா மாநகர சபை ஆணையாளருக்கு காலக்கெடு விதித்துள்ளார்.