பெண் வைத்தியர்களை குளியலறையில் வீடியோ எடுத்த இலங்கை U-19 கிரிக்கெட் வீரர்கள் கைது.!

70

நாரஹேன்பிட்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த பெண் வைத்தியர்களை குளியலறையில் இரகசியமாக வீடியோ எடுத்ததாக இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுகாதார அமைச்சின் கருத்தரங்கில் பங்கேற்க வந்த வைத்தியர்கள் தங்கியிருந்த இடத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றதாகவும், சம்பவம் சமீபத்தில் நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர்கள் இலங்கை 19 வயதுக்குட்பட்ட (U-19) தேசிய கிரிக்கெட் அணியின் வீரர்கள் என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். அவர்களின் கைபேசிகள் ஆய்வு செய்யப்பட்டபோது, பெண்கள் மட்டுமன்றி ஆண்களையும் மறைமுகமாக வீடியோ பதிவு செய்துள்ளமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மேலும், இந்த வீடியோக்கள் இணையத்தில் பகிரப்பட்டுள்ளனவா அல்லது விற்பனை செய்யப்பட்டுள்ளனவா என்பதையும் குற்றத்தடுப்புப் பிரிவினர் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரும் புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, தலா 5 இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் சமூகத்தில் கடும் எதிர்ப்பையும் கண்டனங்களையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், குறித்த வீரர்களுக்கு எதிராக மேலதிக சட்ட மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.