அர்ச்சுனா எம்பியிடமிருந்து கைத்துப்பாக்கியை அரசாங்கம் உடனடியாக மீளப்பெற வேண்டும்.!  

153

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவிடமிருந்து கைத்துப்பாக்கியை அரசாங்கம் உடனடியாக மீளப்பெற வேண்டும் எனத் தமிழ்த்தேசியப் பேரவையின் அங்கத்துவக் கட்சியாகிய ஜனநாயகத் தமிழ் அரசுக் கட்சியின் உப செயலாளரும், வேலணைப் பிரதேச சபை உறுப்பினருமான கருணாகரன் நாவலன் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று (26.04.2026) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் பெண்களை அச்சுறுத்தும் விதமாக கைத் துப்பாக்கியை பயன்படுத்தியது மிக ஆபத்தான விடயம். உண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தற் பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட கைத்துப்பாக்கியைத் தங்களுடைய பிரச்சினையைக் கேட்பதற்காகச் சென்ற பெண்களிடம் காட்டி அச்சுறுத்தியது என்பது எமது இனத்திற்கே செய்த பெரும் துரோகமாகத்தான் நாங்கள் எண்ணிப் பார்க்க வேண்டி இருக்கிறது.

எனவே, இதை உணர்ந்து அவருக்காக வழங்கப்பட்ட கைத்துப்பாகி மீளப் பெறப்பட வேண்டும் என்று அரசாங்கத்திடமும், நாடாளுமன்ற சபையிடமும் கோரிக்கை விடுக்கின்றோம்.

அவர் எதையும் மதிக்காமல், அவருக்கு அளிக்கப்பட்ட வாக்குகள் தொடர்பில் சிந்திக்காமல், எதற்காக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார் என்பது தொடர்பில் சிந்திக்காமல், எமது மக்களுடைய பிரச்சினைகள், குறைபாடுகளை நாடாளுமன்றத்தில் கதைக்காமல், தன்னுடைய தனிப்பட்ட தேவை களையும், பாதுகாப்பையும் கருதி துப்பாக்கியைப் பெற்றுக் கொண்டு கேவலமாக நடந்து கொள்கிறார். எனவே, அதனை மீளப் பெற வேண்டும் என்றார்.