STF வீரரை மோதிவிட்டு தப்ப முயன்ற மணல் கடத்தல் கும்பல்; துப்பாக்கி முனையில் சுற்றிவளைப்பு.!

81

கிளிநொச்சியில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி சென்ற உழவு இயந்திரங்கள் மீது பொலிஸ் விசேட அதிரடி படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதுடன் சாரதி ஒருவரை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் மற்றுமொரு உழவு இயந்திர சாரதி , உழவு இயந்திரத்தை கைவிட்டு , தப்பி சென்றுள்ள நிலையில் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவத்தில் உழவு இயந்திரத்தை மறிக்க முற்பட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படை உத்தியோகஸ்தர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பரந்தன் – பூநகரி வீதியில் வீதி சோதனை நடவடிக்கையில் நேற்றைய தினம் இரவு பொலிஸ் விசேட அதிரடி படையினர் ஈடுபட்டிருந்த வேளை , வீதியில் மணலுடன் வந்த இரண்டு உழவு இயந்திரங்களை வழிமறித்துள்ளனர்.

அதன் போது உழவு இயந்திரம் ஒன்று , பொலிஸ் விசேட அதிரடி படை வீரை மோதி தள்ளிவிட்டு தப்பி செல்ல முற்பட்ட வேளை அதன் மீது பொலிஸ் அதிரடி படையினர் துப்பாக்கி சூட்டினை மேற்கொண்டனர்.

இதனையடுத்து உழவு இயந்திரங்களையும் வீதியில் கைவிட்டு , சாரதிகள் தப்பியோடியுள்ளனர். அவர்களில் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடி படையினர் மடக்கி பிடித்த நிலையில் மற்றைய நபர் தப்பி சென்றுள்ளார்.

கைது செய்யப்பட்ட சாரதியையும் , மீட்கப்பட்ட இரண்டு உழவு இயந்திரங்களையும் , பொலிஸ் விசேட அதிரடி படையினர் , மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கிளிநொச்சி பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்நிலையில் கிளிநொச்சி பொலிஸார், தப்பியோடிய மற்றைய சாரதியை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதுடன் , மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்