சுமார் 1.1 பில்லியன் போதைப்பொருட்களுடன் 22 பௌத்த தேரர்கள் கைது!!

190

இலங்கை விமான நிலைய வரலாற்றிலேயே இதுவரை கண்டிராத ஒரு மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. சுமார் 1.1 பில்லியன் ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களுடன் 22 பௌத்த தேரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், சனிக்கிழமை இரவு போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் நடத்திய அதிரடி சோதனையில் இந்த கும்பல் பிடிபட்டது.

பள்ளி உபகரணங்கள் மற்றும் இனிப்புப் பண்டங்கள் இருந்த பெட்டிகளுக்குள், மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 110 கிலோ எடையுள்ள ‘குஷ்’ (Kush) மற்றும் ‘ஹாஷிஷ்’ (Hashish) ஆகிய போதைப்பொருட்களை அதிகாரிகள் மீட்டனர்.

கைது செய்யப்பட்ட ஒவ்வொரு தேரரிடமும் தலா 5 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள் இருந்ததாகக் கூறப்படுகிறது.

கடந்த ஏப்ரல் 22-ம் தேதி ஸ்பான்சர் ஒருவரின் ஏற்பாட்டில் இவர்கள் Bangkok சென்றுள்ளனர். அங்கு இவர்கள் சாதாரண உடையில் (Civilian clothing) இருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அவர்களது செல்போன்களில் இருந்து கண்டறியப்பட்டுள்ளன.

இவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும், உயர்கல்வி பயின்று வரும் இளம் தேரர்கள் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வரலாற்றில் பிடிபட்ட மிகப்பெரிய போதைப்பொருள் தொகை மட்டுமல்ல, தேரர்கள் இவ்வளவு பெரிய அளவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு பிடிபடுவதும் இதுவே முதல் முறை.”

கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைக்காக நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். ஒரு புனிதமான போர்வையில் நடந்த இந்த பிரம்மாண்ட கடத்தல் நாடகம் தற்போது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.