கிளிநொச்சியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிய போது பொலிஸார் இடையூறு – மக்கள் கடும் அதிருப்தி!

69

இலங்கையில் அரசியல் ரீதியாக ஆட்சிகள் மாறினாலும், தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் விடயத்தில் இன்னும் காட்சிகள் மாறவில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் மற்றுமொரு சம்பவம் கிளிநொச்சியில் அரங்கேறியுள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு, கிளிநொச்சி மாவட்டம் திருநகர் பகுதியில் நேற்றைய தினம் பொதுமக்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இறுதிப் போரில் உயிரிழந்த தங்களின் உறவுகளை நினைவுகூர்ந்து தமிழ் மக்கள் உணர்வுபூர்வமாக இந்த நிகழ்வை நடத்திக் கொண்டிருந்த வேளையில், அங்கு வந்த ஶ்ரீலங்கா பொலிஸார் அதற்கு முட்டுக்கட்டை போட முயன்றுள்ளனர்.

கஞ்சி வழங்கும் நிகழ்வினால் அப்பகுதியில் போக்குவரத்து தடைப்படுவதாகக் காரணம் காட்டிய பொலிஸார், நிகழ்வை முன்னெடுத்துச் செல்ல விடாது தமிழர்களின் உணர்வுகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டனர்.

இதனால் அங்கு சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியதுடன், பொலிஸாரின் இந்த நடவடிக்கைக்கு அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்புக் கிளம்பியது.

பொலிஸாரின் இந்த அத்துமீறிய செயல் குறித்து அங்கு கூடிருந்த பொதுமக்கள் கடும் ஆவேசத்துடன் கேள்விகளை எழுப்பினர்.

“ஶ்ரீலங்கா பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து வெசாக் பண்டிகை காலங்களில் தெருத்தெருவாக, வீதி வீதியாகப் பெரிய அளவிலான வெசாக் கூடுகளைத் தொங்கவிடுகிறார்கள்; பந்தல்களை அமைக்கிறார்கள். அப்போதெல்லாம் இந்த நாட்டின் போக்குவரத்து தடைப்படவில்லையா? பெரும்பான்மையினரின் மத விழாக்களுக்கு வீதிகளை மறித்து பாதுகாப்பு வழங்கும் பொலிஸாருக்கு, தமிழ் மக்கள் தங்களின் இறந்த உறவுகளுக்கு கஞ்சி வழங்கும் போது மட்டும் போக்குவரத்து நினைவுக்கு வருகிறதா?” என மக்கள் பகிரங்கமாகக் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஆட்சிப் பீடத்தில் யார் அமர்ந்தாலும் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளும், உணர்வுபூர்வமான நினைவேந்தல் உரிமைகளும் தொடர்ந்து நசுக்கப்பட்டு வருவதையே இந்தச் சம்பவம் காட்டுவதாக உள்ளூர்வாசிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இத்தகைய அடக்குமுறைகள் வடக்கு, கிழக்கில் இன்னும் தொடர்கதை ஆவது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.