IMF அதிகாரிகள் குழு இலங்கை வருகை – 5 மற்றும் 6ஆம் கட்ட மீளாய்வு பணிகள் தொடக்கம்.

114

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டத்தின் 5ஆம் மற்றும் 6ஆம் கட்ட மீளாய்வுகளை முன்னெடுக்கவும், மத்திய கிழக்கு மோதல்களின் பொருளாதார தாக்கங்களை ஆய்வு செய்யவும் சர்வதேச நாணய நிதிய (IMF) அதிகாரிகள் குழு வியாழக்கிழமை (26) நாட்டுக்கு வருகை தரவுள்ளது. இந்த குழு எதிர்வரும் ஏப்ரல் 9ஆம் திகதி வரை இலங்கையில் தங்கி, தொடர்புடைய மீளாய்வு பணிகளில் ஈடுபடவுள்ளது.

முன்னதாக, 5ஆம் கட்ட மீளாய்வு தொடர்பான உத்தியோகத்தர் மட்ட இணக்கப்பாடு 2025 டிசம்பர் 15ஆம் திகதி இயக்குநர் சபையின் ஒப்புதலுக்காக பரிசீலிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், 2025 நவம்பர் இறுதியில் ஏற்பட்ட ‘தித்வா’ சூறாவளி காரணமாக ஏற்பட்ட பேரழிவின் பின்னர், துரித நிதியளிப்புத் திட்டத்தின் கீழ் 200 மில்லியன் டொலர் உதவியை இலங்கை கோரியது. இதன் தொடர்ச்சியாக, IMF அதிகாரிகள் 2026ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மீளாய்வு கலந்துரையாடல்களை மீண்டும் ஆரம்பிக்க வருகை தருவதாகவும், 5 மற்றும் 6ஆம் கட்ட மீளாய்வுகளை ஒன்றிணைத்து மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், IMF அதிகாரிகள் ஜனாதிபதி, பிரதமர், நிதியமைச்சர், திறைசேரி செயலாளர், மத்திய வங்கியின் ஆளுநர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் சந்திப்புகள் நடத்தவுள்ளனர். மேலும், ‘தித்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கள விஜயங்களும் மேற்கொள்ளப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மீளாய்வு நடவடிக்கைகள் இலங்கையின் பொருளாதார நிலைமையில் எதிர்கால நிதி ஆதரவுக்கும் கொள்கை மாற்றங்களுக்கும் வழிவகுக்கும் என கருதப்படுகிறது.