சினிமாவை மிஞ்சிய துணிச்சல் : ஒற்றைப் பெண்ணாக மல்லுக்கட்டி மடக்கிப்பிடித்த பெண் போலீஸ்.!

148

திருக்கோவில் போலீஸ் நிலைய பெண்கள் பிரிவு பொறுப்பதிகாரி ஒருவர், கடமையிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது தாக்குதலுக்கு உள்ளான நிலையிலும், குறித்த நபரை துணிச்சலுடன் மடக்கிப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளியந்தீவு பகுதியைச் சேர்ந்த 30 வயது இளைஞன், சாலையோரம் மறைந்து இருந்து அந்த பெண் அதிகாரி மீது சாணம் வீசியதுடன் பின்னர் கத்தியால் தாக்கியுள்ளார். இந்த சம்பவம் சமீபத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலுக்குப் பின்னரும் பின்வாங்காமல் அந்த அதிகாரி உடனடியாக மேலதிகாரிகளுக்கு தகவல் அளித்து குறித்த நபரை துரத்திச் சென்றார். மாணிக்கப் பிள்ளையார் கோவில் அருகே, கத்தி காட்டி மிரட்டிய அந்த நபரை கட்டுப்படுத்த முயன்றபோது அதிகாரி காயமடைந்தார்.

இருந்தபோதிலும், அவர் தன்னுடைய துணிச்சலால் அந்த நபரை தனியாகவே மடக்கிப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தார்.

விசாரணையில், குறித்த நபர் மதுவுக்கு அடிமையானவர் என்றும், அவரை புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்ப அதிகாரி முன்பு நடவடிக்கை எடுத்திருந்ததும் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு, மே 08ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பெண் போலீஸ் அதிகாரியின் துணிச்சலுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் சட்டம் மற்றும் ஒழுங்கை பேணும் அதிகாரிகளின் அர்ப்பணிப்பையும், குற்றச்செயல்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளையும் வெளிப்படுத்துகிறது.