கனமழையால் வெள்ளத்தில் மூழ்கிய பண்டாரவளை நகரம்: போக்குவரத்து மற்றும் வர்த்தகம் பாதிப்பு

99

பண்டாரவளையில் இன்று (11.05.2026) மதியம் பெய்த கடும் மழையால் நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. திடீரென பெய்த கனமழை காரணமாக சில நிமிடங்களிலேயே பிரதான வீதிகளில் நீர் தேங்கியதுடன், நகரின் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

வடிகால் அமைப்புகள் நிரம்பியதால் வெள்ளநீர் வர்த்தக நிலையங்களுக்குள் புகுந்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அசௌகரியத்திற்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக பதுளை – பண்டாரவளை பிரதான வீதியில் முழங்கால் அளவிற்கு நீர் தேங்கியதால் வாகனப் போக்குவரத்து மந்தமானது. பல இடங்களில் பொதுமக்கள் சிரமத்துடன் பயணித்ததாக கூறப்படுகிறது.

மழை தொடர்ந்து பெய்துவரும் நிலையில், மலைப்பாங்கான பகுதிகளில் மண்சரிவு அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், மின்சார கசிவுகள் ஏற்படும் அபாயம் காரணமாக மின்கம்பங்கள் மற்றும் மின் இணைப்புகளுக்கு அருகில் செல்ல வேண்டாம் என அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.