மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தலா வருமானம் உயர்வு – மத்திய வங்கியின் பொருளாதார மீளாய்வு அறிக்கையில் தகவல்.!

45

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள 2025 ஆம் ஆண்டுக்கான பொருளாதார மீளாய்வு அறிக்கையின் பிரகாரம் 2024 ஆம் ஆண்டு 4,546 டொலராகப் பதிவாகியிருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தலா வருமானம், கடந்த ஆண்டு 5,003 டொலராக உயர்வடைந்து வலுவான பொருளாதார வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளது.

பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தி விரிவாக்கம் மற்றும் நடுத்தரகால சனத்தொகை வீழ்ச்சி என்பன இந்த உயர்வுக்குக் காரணமாக அமைந்திருப்பதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த ஆண்டு இறுதியில் ‘தித்வா’ சூறாவளியினால் ஏற்பட்ட பேரனர்த்தத்துக்கு மத்தியிலும், நாட்டின் நிலையான விலையிலான மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதமாக வளர்ச்சியடைந்ததாகவும், நான்கு காலாண்டுகளுக்கும் மேல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தலா வருமானத்துக்கு நேர்மறையான பங்களிப்பை வழங்கியதாகவும் மத்திய வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘குறிப்பாக உற்பத்தி மற்றும் நிர்மாண நடவடிக்கைகளை உள்ளடக்கிய கைத்தொழில் துறை ஒட்டுமொத்த விரிவாக்கத்துக்கு வழிவகுத்தது. அதேவேளை நிதி மற்றும் போக்குவரத்து ஆகிய சேவைத்துறைகளும் கணிசமான பங்களிப்பை வழங்கின. அத்தோடு 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு விவசாயத்துறை மிகையான வளர்ச்சியைப் பதிவுசெய்தது’ என்றும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் 2024 ஆம் ஆண்டு 30,095.8 பில்லியன் ரூபாவாகப் பதிவான சந்தை விலையிலான மொத்த உள்நாட்டு உற்பத்தி, 2025 ஆம் ஆண்டு 32,750.8 பில்லியன் ரூபாவாக அதிகரித்ததாகவும், மொத்தத் தேசிய வருமானம் 32,142.2 பில்லியன் ரூபாவாக அதிகரித்ததாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.