தமிழ் அரசியலின் துணிவான குரல் – மாமனிதர் குமார்.

196

தமிழ் அரசியலின் நேர்மையான குரல் – மாமனிதர். குமார் பொன்னம்பலம் நினைவாக  

(1940.08.12 – 2000.01.05)

இலங்கைத் தமிழ் அரசியல் வரலாற்றில், பதவி அல்லது அதிகாரத்தைவிட கொள்கையும் துணிவும் முக்கியம் என்பதைக் கற்பித்த தலைவர்களில் ஒருவர் குமார் பொன்னம்பலம். அகில இலங்கை தமிழ் காங்கிரசின் நிறுவனர் ஜி. ஜி. பொன்னம்பலத்தின் மகனாகப் பிறந்த இவர், அரசியல் பாரம்பரியத்தைச் சுமந்தவராக மட்டுமல்லாது, தனித்த அரசியல் அடையாளத்தைக் கொண்ட மனிதராகவும் விளங்கினார்.

யாழ்ப்பாணம் வடமராட்சியில் ஜி. ஜி. பொன்னம்பலம் – ரோஸ் அழகுமணி கிளவ் தம்பதியருக்கு மகனாகப் பிறந்த குமார் பொன்னம்பலம், சிறுவயதிலிருந்தே அரசியல் சூழலில் வளர்ந்தவர். யாழ்ப்பாணம் அரச அதிபராகப் பணியாற்றிய முருகேசம்பிள்ளையின் மகள் யோகலட்சுமியை திருமணம் செய்தார்.

சட்டம் பயின்று பாரிஸ்டர் பட்டம் பெற்ற அவர், வழக்கறிஞராக மட்டுமன்றி, ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக நீதிமன்றங்களிலும் சமூகத்திலும் செயல்பட்டார்.

1966 ஆம் ஆண்டு முதல் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணிச் செயலாளராகச் செயற்பட்ட குமார் பொன்னம்பலம், 1977 ஆம் ஆண்டு தந்தையின் மறைவுக்குப் பின்னர் கட்சித் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

1970 ஆம் ஆண்டுகளுக்குப் பின்னர், தமிழ்க் காங்கிரஸ் கட்சி தமிழர் கூட்டணியின் உறுப்புக் கட்சியாக இணைந்திருந்த நிலையில், 1977 பொதுத் தேர்தல் குமாரின் அரசியல் வாழ்வில் முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. தந்தை பலமுறை வெற்றி பெற்ற யாழ்ப்பாணத் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்ற அவரது விருப்பம், கூட்டணியின் உள் கொள்கை காரணமாக நிராகரிக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த அவர், யாழ்ப்பாணத் தொகுதியில் தனித்துப் போட்டியிட்டார். வெற்றி பெற முடியாவிட்டாலும், இந்த முடிவு அவரது உறுதியை வெளிப்படுத்தியது காரணம் வடக்கு கிழக்கில் எத் தொகுதியில் போட்டியிட்டாலும் வெற்றி என்ற நிலையிலும் தனது முடிவில் உறுதியாக இருந்தார்.

1977 தேர்தலுக்குப் பின்னர், தமிழ்க் காங்கிரசை மீண்டும் தனிச்சக்தியாக இயங்கச் செய்ய குமார் பொன்னம்பலம் முயற்சித்தார். ஆனால், அந்த காலகட்டத்தில் தமிழ் அரசியலில் மிதவாதக் குரல்கள் பலவீனமடைந்து, விடுதலை அரசியல் முன்னிலைக்கு வந்தது. இதன் காரணமாக, தனித்த அரசியல் பாதையில் பயணிப்பது பெரும் சவாலாக மாறியது.

எனினும், நாடு முழுவதும் நடைபெற்ற அதிபர் தேர்தலில் அவர் போட்டியிட்டார். வெற்றி இலக்காக இல்லாமல், தமிழீழத்துக்கான தமிழ் மக்களின் அரசியல் ஆதரவை நாட்டளவில் வெளிப்படுத்தும் நோக்கத்துடன் தமிழீழ கோரிக்கையை முன்வைத்து  தமிழ் மக்கள் அனைவரும் தமக்கு வாக்களிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

இறக்கும் வரை நாடாளுமன்ற அரசியலில் வெற்றிகள் கிட்டாவிட்டாலும், குமார் பொன்னம்பலம் இலங்கைத் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக இடைவிடாது குரல் கொடுத்தார். அரசியல் காரணங்களால் கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்களுக்காக நீதிமன்றங்களில் வாதாடினார். எவ்வித அச்சமுமின்றி, தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை வெளிப்படுத்திய அவரது துணிவு, இனவாத சக்திகளுக்கு எரிச்சலாக அமைந்தது.

2000 ஆம் ஆண்டு சனவரி 5 அன்று, கொழும்பு வெள்ளவத்தை இராமகிருஷ்ண வீதியில், இனந்தெரியாதோரால் குமார் பொன்னம்பலம் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த படுகொலை, இலங்கைத் தமிழ் அரசியலில் ஒரு பெரும் வெற்றிடத்தை உருவாக்கியது. ஆயுதப்போராட்டத்தின் பிறப்புப்பற்றியும், அதன் தவிர்க்க முடியாத தேவை பற்றியும் உலகப் பிரமுகர்களுக்கும் விளக்குவார். தமிழ் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களை அம்பலபப்டுத்தி, அவற்றை சர்வதேச மனித உரிமைக் கழகங்களிடம் எடுத்துச் செல்வார்.

புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் போராட்டத்திற்கு ஆற்றவேண்டிய பங்களிப்புகள் பற்றி விளக்குவார். பேரினவாதிகளின் இனவாதக் கருத்துக்களுக்கு பதில் கருத்துக்களை அளிப்பார். எமது இனத்தின் அறிவுஜீவிகளுக்கு ஒரு முன் மாதிரியாகத் திகழ்ந்திள்ள திரு. குமார் பொன்னம்பலம் சிங்களப் பேரினவாதிகளுடன் மட்டுமன்றி பேரினவாதத்திற்கு ஏவல் செய்யும் தமிழ்க்குழுக்களுக்கும் எதிராகவும் அவர் காட்டமானவகையில் தனது எதிர்புணர்வைக் காட்டியுள்ளார்.கனடா வாழ் தமிழீழ மக்களால் “மாமனிதர்” குமார் பொன்னம்பலம் நினைவாக தபால் முத்திரையும் வெளியீடபப்ட்டது.

அவரது மறைவுக்குப் பின்னர் தமிழீழ  விடுதலைப் புலிகள் அமைப்பினால் “மாமனிதர்” என்ற உயரிய கௌரவம் வழங்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டார்.
குமார் பொன்னம்பலம் இன்று உயிருடன் இல்லாவிட்டாலும், நீதிக்காக அவர் எடுத்த நிலைப்பாடுகள், கொள்கைக்காக அவர் செலுத்திய விலை தமிழ் அரசியல் வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்.

மாமனிதர் குமார் பொன்னம்பலம் – தமிழர் நினைவில் என்றும்.

– குரலகம்