சித்திரைப்புத்தாண்டு 2026: மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள்

53

தமிழ்–சிங்கள சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை (14) காலை மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பராபவ புத்தாண்டு இன்று காலை 8.40 மணிக்கும், திருக்கணித பஞ்சாங்கத்தின்படி 9.32 மணிக்கும் பிறந்ததாகக் கூறப்படுகின்ற நிலையில், நாடளாவிய ரீதியில் ஆலயங்களில் விசேட பூஜைகள் முன்னெடுக்கப்பட்டன.

மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் சுபவேளையில் மருத்துநீர் வைத்து விசேட அபிஷேகம் நடத்தப்பட்டதுடன், தொடர்ந்து விசேட பூஜைகளும் இடம்பெற்றன. ஆலய பிரதகுரு சிவஸ்ரீ சுகுமார் குருக்கள் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நாட்டில் துன்பங்கள் நீங்கி மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் எனப் பிரார்த்தனைகள் செய்யப்பட்டது.

மேலும், சித்திரைப்புத்தாண்டை ஒட்டி ஆலயத்தில் கைவிசேடம் வழங்கப்பட்டதுடன், தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். இந்த விழா நல்லிணக்கத்தின் அடையாளமாகக் கருதப்படும் நிலையில், எதிர்காலத்தில் மக்களின் வாழ்வில் அமைதி மற்றும் வளம் நிலைக்க வேண்டுமென அனைவரும் விரும்புகின்றனர்.