பராபவ தமிழ் புத்தாண்டு 2026: ஏப்ரல் 14 – சுப நேரம், வழிபாட்டு முறைகள் முழு விவரம்.

106

பராபவ தமிழ் புத்தாண்டு 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சதயம் நட்சத்திரத்தில் பிறக்கிறது. இந்த நாளில் பகல் 11:45 முதல் 12:30 மணி வரை உள்ள அபிஜித் முகூர்த்தமும் குரு ஓரையும் சிறந்த சுப நேரமாகக் கருதப்படுகிறது.

இந்த நேரத்தில் புதிய கணக்குகளைத் தொடங்குதல், புதிய முயற்சிகளை ஆரம்பித்தல் போன்றவை நல்ல பலன்களை தரும் என ஜோதிட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழ் புத்தாண்டு தினத்தில் வீடுகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் மாக்கோலம் இட்டு, நெய் தீபம் ஏற்றி, பஞ்சாங்கத்தை வைத்து தீப தூபம் காட்டி அதிலுள்ள பகுதிகளை வாசிப்பது வழக்கமாகும்.

பஞ்சாங்கம் என்பது வாரம், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் ஆகிய ஐந்து அங்கங்களை கொண்டதாகும். இது வானியல் கணித அடிப்படையில் உருவாக்கப்பட்டதுடன், அமாவாசை, பௌர்ணமி, கிரகணம் உள்ளிட்ட பல நிகழ்வுகளை முன்னறிவிக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

இந்த நன்னாளில் ஆலயங்களுக்கு சென்று இறைவனை வழிபடுதல், ஏழை எளியவர்களுக்கு தானம் வழங்குதல் ஆகியவை சிறப்பான பலன்களை தரும் என நம்பப்படுகிறது.

மேலும், வெங்காயம் மற்றும் பூண்டு தவிர்த்து வேப்பம்பூ ரசம், வெந்தயம் மற்றும் மாங்காய் சேர்த்த பச்சடி தயாரித்து இறைவனுக்கு நிவேதனம் செய்து அனைவரும் பகிர்ந்து கொள்வதும் வழக்கமாகும். பராபவ தமிழ் புத்தாண்டு அனைவருக்கும் நல்ல நிகழ்வுகளையும் சுப பலன்களையும் வழங்க வேண்டுமென பிரார்த்திக்கப்படுகிறது.