முல்லைத்தீவில் சகோதரியை கத்தியால் தாக்கிய சகோதரர்! கிணற்றில் வீழ்ந்து பலி!

105

முல்லைத்தீவு முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கணுக்கேணி பகுதியில் சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில், தனது சகோதரியைக் கத்தியால் தாக்கிய சகோதரர் பின்னர் தப்பியோடிய நிலையில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (12) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சில நாட்களுக்கு முன்பு சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைக்கலப்பாக மாறிய நிலையில், குறித்த நபர் தனது சகோதரியைக் கத்தியால் தாக்கியுள்ளார்.

காயமடைந்த சகோதரி அப்பகுதியில் கிராம அலுவலராகப் பணியாற்றி வருபவர் என்றும், அவர் முதலில் முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். தாக்குதலுக்குப் பிறகு குறித்த நபர் தலைமறைவாகியிருந்தார்.

இரண்டு நாட்களாக தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், அவர்களது வீட்டுத் தோட்டத்துக் கிணற்றிலிருந்து 32 வயதுடைய சகோதரரின் சடலம் மீட்கப்பட்டது.

அவர் நீண்டகாலமாக மனநலப் பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வந்ததாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக முள்ளியவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.