தெமட்டகொடை சமிந்தவை படுகொலை செய்ய சதி? ; மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் தீவிர விசாரணை!

82

பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சமிந்த ரவி ஜயநாத் எனப்படும் ‘தெமட்டகொடை சமிந்த’வை கொலை செய்யும் சதித்திட்டம் தீட்டப்பட்டதாகக் கூறப்படும் தகவல் தொடர்பில் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. தற்போது பூஸா அதிஉயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இவர் தொடர்பாக இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

பூஸா சிறையிலிருந்து வெலிசறை கடற்படை முகாமிற்கு மாற்றப்படுவதைத் தடுப்பதற்காகவே இந்த சதி திட்டம் முன்வைக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். மேலும், சமிந்த சிறையிலிருந்தபடியே கையடக்கத் தொலைபேசி மூலம் குற்றச் செயல்களை வழிநடத்துவதாக கடந்த காலங்களில் புலனாய்வு தகவல்கள் வெளியான நிலையில், அவரை மாற்றும் நடவடிக்கைகள் தொடர்பாக பரவிய குரல் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்தச் சம்பவம் தொடர்பில் சிஐடி அதிகாரிகள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கமல் ஆரியவன்சவின் வழிகாட்டலில் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். நீதிமன்ற அனுமதியுடன் பூஸா சிறை அதிகாரிகளிடமும் சமிந்தவிடமும் வாக்குமூலம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கின் உண்மை நிலை தொடர்பான மேலதிக தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.