சட்டவிரோத பஸ் போக்குவரத்து: கொழும்பில் 07 பஸ்கள் சுற்றிவளைப்பு!

123

கொழும்பு Peoples Park பகுதியில் இருந்து ஹட்டன், நாவலப்பிட்டி மற்றும் டயகம பகுதிகளுக்கு சட்டவிரோதமாக பயணிகளை ஏற்றிச் செல்வதாக கிடைத்த தகவலின் பேரில், சனிக்கிழமை (11) இரவு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் நடமாடும் சோதனை அதிகாரிகள் மற்றும் பெஸ்டியன் மாவத்தை பஸ் நிலைய அதிகாரிகள் இணைந்து சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது 7 பஸ்கள் கைப்பற்றப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சோதனையில் கைப்பற்றப்பட்ட பஸ்கள் பயணிகளிடமிருந்து நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகமாக பணம் வசூலித்ததோடு, முறையான அனுமதிப்பத்திரங்கள் இன்றி சேவைகளை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதுகுறித்து தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் (செயற்பாடு) ஷெரின் அத்துகோரல தகவல் வழங்கியுள்ளார்.

மேலும், பண்டிகைக் காலங்களில் பயணிகள் சட்டவிரோத பஸ் சேவைகளைத் தவிர்க்க வேண்டும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். சட்டப்பூர்வமான போக்குவரத்து வசதிகள் மத்திய பஸ் நிலையம் மற்றும் பெஸ்டியன் மாவத்தை உள்ளிட்ட இடங்களில் தயாராக உள்ளதாகவும், இவ்வாறான சட்டவிரோத சேவைகள் பயணிகளின் உயிர் மற்றும் பாதுகாப்புக்கு ஆபத்தாக இருக்கக்கூடும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.