கொக்கட்டிச்சோலையில் கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் ; 6 சந்தேகநபர்கள் விளக்கமறியல்..!!

204

மட்டக்களப்பில் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெல்லிக்காடு பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து ஒரு பெண் உயிருடன் மீட்கப்பட்டதும், மற்றொரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டதும் தொடர்பான பரபரப்பான சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை இம்மாதம் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை வெள்ளிக்கிழமை (10) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

நீதவான் முன்னிலையில் விசாரணை இடம்பெற்றபோது, கடத்தல், கொள்ளை மற்றும் கொலை சம்பவங்களுடன் தொடர்புடைய 4 சந்தேகநபர்களுடன், இரண்டு நகைக்கடை உரிமையாளர்களையும் விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

விசாரணை நாளில் சந்தேகநபர்களில் ஒருவர் மட்டுமே நீதிமன்றத்திற்கு நேரில் ஆஜர்படுத்தப்பட்டதுடன், ஏனையவர்கள் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படாமல் நிகழ்நிலை முறையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இவ்வழக்கில் மொத்தம் 6 சந்தேகநபர்களும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்படுவதாக நீதிமன்றம் அறிவித்ததுடன், மறுவிசாரணை இம்மாதம் 15ஆம் திகதி நடைபெறும் எனவும் தெரிவித்தது. இந்த வழக்கின் மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெறவுள்ளன.