பாடசாலை மதிய உணவுத் திட்டம் நெருக்கடியில் – நிதி உயர்த்த கோரிக்கை.

16

அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சமையல் எரிவாயுவின் விலை உயர்வு காரணமாக, இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பாடசாலை மாணவர்களுக்கான மதிய உணவுத் திட்டம் கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான பாடசாலைகளில் இந்த நிலைமை உருவாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

சுமார் 7,000 பாடசாலைகளில் 1.6 மில்லியன் மாணவர்களை உள்ளடக்கிய இந்தத் திட்டத்திற்கு, ஒரு மாணவருக்குத் தலா 110 ரூபாய் அரசாங்கம் ஒதுக்குகிறது. ஆனால், தற்போதைய சந்தை விலையேற்றத்தால் இந்த தொகையைக் கொண்டு சத்தான உணவை வழங்குவது விநியோகஸ்தர்களுக்கு கடினமாகியுள்ளது. குறிப்பாக, விநியோகஸ்தர்களில் பலர் சமூர்த்தி பயனாளிகள் என்பதால், இச்சுமையைத் தாங்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

இந்த சூழ்நிலையில், மாணவர்களின் போஷாக்கு நிலையை பாதுகாக்க உடனடியாக ஒதுக்கப்படும் நிதியை அதிகரிக்க வேண்டும் என கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இந்தத் திட்டம் பாதிக்கப்படாமல் தொடர அரசு துரிதமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியமாகியுள்ளது.