கட்டுநாயக்க விமான நிலையத்தில் 229 அலங்காரச் செடிகள் பறிமுதல்: ரூ.7.75 லட்சம் மதிப்பில் நபர் கைது.!

66

சுமார் 775,000 ரூபாய் பெறுமதியான அலங்காரச் செடிகளை சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வர முயன்ற நபர் ஒருவர் இன்று (11) சனிக்கிழமை காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெயங்கொடை பகுதியைச் சேர்ந்த இவர், இன்று அதிகாலை 12:45 மணியளவில் பெங்களூரிலிருந்து வந்த இண்டிகோ 6E-1183 விமானம் மூலம் இலங்கையை வந்தடைந்துள்ளார்.

விமான நிலைய வருகை முனையத்தில் Green Channel வழியாக வெளியேற முயன்றபோது, அவரது பயணப் பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 229 அலங்காரச் செடிகள் சுங்க அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டன.

இவை தேவையான அனுமதிப் பத்திரங்கள் இன்றி கொண்டுவரப்பட்டதாகவும், தாவரத் தனிமைப்படுத்தல் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு விதிமுறைகளை மீறியுள்ளதாகவும் விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து குறித்த அலங்காரச் செடிகள் அனைத்தும் கைப்பற்றப்பட்டு அரசுடைமையாக்கப்பட்டுள்ளன. மேலும், சம்பவத்தில் ஈடுபட்ட நபருக்கு 100,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சட்டவிரோத இறக்குமதிகளைத் தடுக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து வலுப்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.