நாட்டில் தொடர் விபத்துகள்: சிறுமி உட்பட 7 பேர் பலி – பல இடங்களில் துயர சம்பவங்கள்.!!

90

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற பல்வேறு வீதி விபத்துகளில் சிறுமி ஒருவர் உட்பட ஏழுபேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு – ஹொரண, பாதுக்க, மாவத்தகம, கொஸ்கொட, மட்டக்குளிய, மகிந்தாங்கன மற்றும் கிராந்துருக்கோட்டை பகுதிகளில் நேற்று இடம்பெற்ற விபத்துகளில் இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

ஹொரண பகுதியில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் மோதியதில் 45 வயதுடைய நபர் உயிரிழந்தார். பாதுக்க பகுதியில் மோட்டார் சைக்கிள் பாதசாரி மீது மோதியதில் 32 வயதுடையவர் உயிரிழந்தார்.

மாவத்தகம பகுதியில் முச்சக்கர வண்டி லொறியுடன் மோதியதில் 74 வயதுடையவர் உயிரிழந்தார். கொஸ்கொட பகுதியில் மோட்டார் சைக்கிள் சைக்கிளுடன் மோதியதில் 73 வயதுடையவர் உயிரிழந்தார்.

மட்டக்குளிய பகுதியில் பஸ்ஸில் இருந்து இறங்கி வீதியை கடக்க முயன்ற 10 வயது சிறுமி பஸ் கீழ் சிக்கி உயிரிழந்தார். மகிந்தாங்கன பகுதியில் நாய் மீது மோதிய மோட்டார் சைக்கிள் விபத்தில் 55 வயதுடைய நபர் உயிரிழந்தார்.

கிராந்துருக்கோட்டை பகுதியில் வேன் மற்றும் முச்சக்கர வண்டி மோதியதில் 39 வயதுடைய பெண் உயிரிழந்தார்.

இந்த விபத்துகளில் பலர் காயமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்; சம்பந்தப்பட்ட வாகன ஓட்டுநர்களில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்ச்சியான விபத்துகள் சாலை பாதுகாப்பு குறித்து கடும் கவலை ஏற்படுத்தியுள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்; எதிர்காலத்தில் இத்தகைய விபத்துகளைத் தடுக்க கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியமாகின்றன.