புதையல் தோண்டும் முயற்சி: 6 பேர் கைது, உபகரணங்கள் பறிமுதல்.!!

92

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குகணேசபுரம் பகுதியில் புதையல் தோண்டும் செயலில் ஈடுபட்ட 6 பேரை இன்று (10) வெள்ளிக்கிழமை அதிகாலை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். கருங்காலிச்சோலை பகுதியில் உள்ள தனியார் காணியில் இந்த சட்டவிரோத நடவடிக்கை இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாழைச்சேனை கடதாசி ஆலை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், குறித்த இடத்தை சுற்றிவளைத்து சோதனை நடத்தியபோது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து புதையல் தோண்டும் உபகரணங்கள் மற்றும் பூஜைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டு வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள் கருங்காலிச்சோலை, ஓட்டமாவடி, நவகந்தேகம, உயாங்கொட மற்றும் நுவரெலியா பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.