சங்கக்கார பெயரில் முதலீட்டு மோசடி வீடியோ: பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை.!!

51

முன்னாள் கிரிக்கெட் அணித்தலைவர் குமார் சங்கக்கார பாரிய முதலீட்டு வாய்ப்பை பரிந்துரைப்பதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளி போலியானது என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நேற்று (09) வெளியான தகவல்களின் அடிப்படையில், Factcrescendo உண்மை கண்டறியும் இணையதளம் மேற்கொண்ட விசாரணையில், இந்த காணொளி திட்டமிட்ட இணைய மோசடியின் ஒரு பகுதியாக இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

உள்ளூர் ஊடக இணையதள வடிவமைப்பை ஒத்த போலிச் செய்திகளில், குமார் சங்கக்கார மற்றும் வர்த்தகர் ஒதாரா குணவர்தன ஆகியோர் இந்த முதலீட்டு திட்டத்துடன் தொடர்புடையவர்கள் என தவறான தகவல்கள் பரப்பப்பட்டிருந்தன.

பின்னர் இத்தகவல்கள் மாற்றப்பட்டு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பெயரும் இதனுடன் இணைக்கப்பட்டு புதிய போலித் தகவல்கள் பரவியுள்ளன. இலங்கை கணனி அவசரப் பிரதிபலிப்புத் தளம் இதை முழுமையாக மோசடி என உறுதிப்படுத்தியுள்ளது.

இத்தகைய மோசடிகள் பொதுமக்களின் நம்பிக்கையை ஏமாற்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதால், தனிப்பட்ட தகவல்கள் மற்றும் சமூக ஊடக கணக்குகள் திருடப்படும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

சந்தேகத்திற்கிடமான தகவல்களை பகிர்வதற்கு முன் அவற்றின் உண்மைத்தன்மையை சரிபார்க்க வேண்டும் என்றும், இதுபோன்ற மோசடிகள் குறித்து உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் அளிக்க வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.