கரடி பொம்மைக்குள் வைத்து கடத்தப்பட்ட ஐஸ் போதைப்பொருள்: முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் கைது.!

128

அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில், கொரியர் சேவை ஊடாக சூட்சுமமாக கடத்தி வரப்பட்ட ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டதுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் புதன்கிழமை (08) மாலை இடம்பெற்றதாகவும், பல வீடுகளில் மணிக்கணக்கில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் நேரடி கண்காணிப்பில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் போது, 43 வயது மதிக்கத்தக்க காரைதீவு பிரதேச சபை முன்னாள் உறுப்பினரான நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொரியர் சேவை மூலம் அனுப்பப்பட்ட விளையாட்டுப் பொருட்களில் உள்ள கரடி பொம்மையின் கழுத்துப் பகுதியில் மறைத்து வைத்திருந்த 107 கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

இதோடு இலத்திரனியல் தராசுகள், கைப்பேசிகள் மற்றும் பணம் உள்ளிட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த சோதனை நடவடிக்கை உயர் அதிகாரிகளின் வழிநடத்தலில், பல பொலிஸ் அதிகாரிகள் இணைந்து மேற்கொண்டுள்ளனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து சான்றுப் பொருட்களும் சட்ட நடவடிக்கைக்காக கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்று (09) கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. போதைப்பொருள் கடத்தலை தடுக்கும் நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.