பாதுகாப்பற்ற நீர் குழியில் விழுந்து 6 வயது சிறுவன் பலி.!!

124

அனுராதபுரம் மாவட்டத்தின் மரதங்கடவல பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடொன்றின் அருகிலிருந்த பாதுகாப்பற்ற நீர் நிரம்பிய குழிக்குள் விழுந்து 6 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த துயர சம்பவம் செவ்வாய்க்கிழமை (7) இரவு கொள்ளக்குட்டிகம பகுதியில் இடம்பெற்றதாகவும், சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் தொடங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பக்கட்ட விசாரணைகளின்படி, குறித்த சிறுவன் தனது இரு சகோதரர்கள் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து, வீட்டிற்கு அருகில் கட்டப்பட்டு வரும் வீடொன்றிற்குப் புறாக்களைப் பிடிக்கச் சென்றுள்ளார்.

அப்போது அங்கிருந்த சுமார் 7 அடி ஆழமுள்ள, பாதுகாப்பின்றி திறந்த நிலையில் காணப்பட்ட நீர் நிரம்பிய குழிக்குள் எதிர்பாராத விதமாக தவறி விழுந்துள்ளார். சம்பவத்தையடுத்து பிரதேசவாசிகள் அவரை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தினர்.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த சிறுவன் மரதங்கடவல பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இச்சம்பவம் பிரதேச மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. மேலும், சம்பவம் தொடர்பாக மரதங்கடவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.