அமெரிக்கா–ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை இஸ்லாமாபாத்தில் நாளை : பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு.!

146

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இரு நாடுகளுக்கிடையேயான அமைதிப் பேச்சுவார்த்தை பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நாளை வெள்ளிக்கிழமை (10) நடைபெறவுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவித்துள்ளார். இரு நாடுகளுக்கிடையேயான மோதல்களை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் இந்த பேச்சுவார்த்தை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், இரு நாடுகளின் தலைமைக்கும் நன்றி தெரிவித்து, அனைத்துப் பிணக்குகளையும் தீர்க்க உறுதியான ஒப்பந்தத்தை எட்டுவதற்காக அமெரிக்கா மற்றும் ஈரான் பிரதிநிதிகளை இஸ்லாமாபாத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த அழைப்பை தொடர்ந்து, பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஈரான் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், ஈரான் ஜனாதிபதி பெசஷ்கியான் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், இரு தரப்புகளுக்கிடையேயான மோதலை நிறுத்த பாகிஸ்தான் எடுத்து வரும் முயற்சிகளை அவர் பாராட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த பேச்சுவார்த்தை தொடர்பாக ஈரான் ஜனாதிபதியுடன் பாகிஸ்தான் பிரதமர் சுமார் 45 நிமிடங்கள் தொலைபேசி வழியாக உரையாடியுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ள இந்த பேச்சுவார்த்தை, அமெரிக்கா–ஈரான் உறவில் அமைதியை ஏற்படுத்தும் முக்கியமான கட்டமாக அமையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.