நவீன வசதிகளுடன் கொழும்பு–புறக்கோட்டை மத்திய பஸ் நிலையம் இன்று திறப்பு

101

நவீனமயப்படுத்தப்பட்ட கொழும்பு–புறக்கோட்டை மத்திய பஸ் நிலையம் இன்று புதன்கிழமை (08) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படுகிறது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்த நிலையத்தை திறந்து வைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கையளிக்கவுள்ளதாக கிளீன் ஸ்ரீ லங்கா செயலகத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் கபில சேனரத் தெரிவித்துள்ளார்.

சுமார் 585 மில்லியன் ரூபா செலவில் மேற்கொள்ளப்பட்ட இந்தப் புனரமைப்புப் பணிகள், விமானப்படையினரின் மனிதவளம் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புடன் பல நிறுவனங்களின் பங்களிப்பில் நிறைவு பெற்றுள்ளன.

பயணிகளின் வசதிக்காக பஸ் புறப்படும் மற்றும் சென்றடையும் நேரங்கள் அகன்ற டிஜிட்டல் திரைகளில் காட்சிப்படுத்தப்படவுள்ளதுடன், புறக்கோட்டை ரயில் நிலைய ரயில் சேவைகள் மற்றும் விமான சேவைகள் குறித்த தகவல்களையும் ஒரே இடத்தில் அறிந்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு பயணம் செய்யும் மக்களுக்கு எவ்வித சிரமமும் இல்லாதவாறு அனைத்து வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன.

தினசரி சுமார் 1,500 பஸ் சேவைகள் இங்கிருந்து இயக்கப்படவுள்ள நிலையில், அவற்றை பராமரிக்க இலங்கை போக்குவரத்து சபையின் பயிற்சி பெற்ற அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் அமைக்கப்பட்ட இந்த நிலையம் பயணிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.