ரூபவாஹினி நிதி மோசடி: முன்னாள் தலைவர் சரத் கொங்கஹகே உள்ளிட்ட இருவர் கைது.!

83

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு அதிகாரிகள், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துடன் தொடர்புடைய நிதி மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பில் முன்னாள் தலைவர் சரத் கொங்கஹகே மற்றும் முன்னாள் பணிப்பாளர் நாயகம் தேவப்பிரிய அபேசிங்க ஆகியோரை கைது செய்துள்ளனர்.

அங்கீகரிக்கப்பட்ட பணியாளர் தொகுதிக்கு புறம்பாக ஆறு பணியாளர்களை சட்டவிரோதமாக நியமித்து, அவர்களை முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் தனிப்பட்ட ஊழியர்களாக பணியமர்த்தியதாகவும், அவர்களுக்கு தேசிய தொலைக்காட்சி ஊடாக ஊதியம் வழங்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அரசுக்கு சுமார் ரூ.14.32 மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக ஆணைக்குழு விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது. சம்பந்தப்பட்ட நிதி முறைகேடுகள் மற்றும் நிர்வாக தவறுகள் குறித்து மேலதிக தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

மேலும், வழக்குடன் தொடர்புடைய பிற நபர்கள் குறித்தும் விசாரணைகள் நடைபெற்று வருவதுடன், சட்ட நடவடிக்கைகள் தொடரப்படும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.