பாராளுமன்றில் ஜனாதிபதி விசேட உரை : முக்கிய அறிவிப்புகள்.!

63

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று செவ்வாய்க்கிழமை (7) பாராளுமன்றத்தில் உரையாற்றி, உலகளாவிய எரிபொருள் நெருக்கடி மற்றும் இஸ்ரேல், அமெரிக்கா – ஈரான் போர்ச் சூழலால் நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி குறித்து விளக்கமளித்தார். மீனவர்கள் மற்றும் விவசாயிகளுக்கான மானிய திட்டங்கள் தொடர்பாகவும் அவர் கருத்து வெளியிட்டார்.

இதன்போது, குறைந்த வருமானம் பெறும் அஸ்வெசும திட்ட பயனாளர்களுக்கான மாதாந்திர கொடுப்பனவு 17,500 ரூபாவிலிருந்து 25,000 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அறிவித்தார்.

இந்த அதிகரிப்பு ஏப்ரல் மாதத்திற்கே மட்டுப்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். அதேசமயம், எரிபொருள் விலை உயர்வு காரணமாக கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை குறைக்கும் வகையில் புதிய நிவாரண திட்டங்களும் அறிவிக்கப்பட்டன.

இதன் கீழ், வரும் மூன்று மாதங்களுக்கு எரிபொருள் நிவாரணம் வழங்கப்படும் எனவும், ஒரு லீற்றர் டீசலுக்கு 100 ரூபாய் மற்றும் பெற்றோலுக்கு 20 ரூபாய் நிவாரணம் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மாதந்தோறும் 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மொத்தம் 600 கோடி ரூபாய் செலவிடப்படும். மேலும், கடற்றொழிலாளர்களுக்கு நேரடி பணம் வைப்புகளும், ஆழ்கடல் மீனவர்களுக்கு பயணத்துக்கு 1.5 இலட்சம் ரூபாய் எரிபொருள் நிவாரணமும் வழங்கப்படும் என ஜனாதிபதி அறிவித்துள்ளார்.