இலங்கையில் பாலின இடைவெளி அதிகரிப்பு: பொருளாதார மீட்சிக்குப் பெண்களுக்கு சம வாய்ப்பு அவசியம் – ஐ.நா. பெண்கள் அமைப்பு!

165

இலங்கையின் உள்ளடக்கிய பொருளாதார மீட்சிக்காக தொழிலாளர் சந்தையில் பாலின இடைவெளியைக் குறைப்பதும், முடிவெடுக்கும் அதிகாரத்தில் பெண்களுக்கு சம வாய்ப்புகளை வழங்குவதும் அவசியம் என ஐக்கிய நாடுகள் பெண்கள் அமைப்பின் ஆசிய மற்றும் பசிபிக் பிராந்திய பணிப்பாளர் கிறிஸ்டின் அரப் வலியுறுத்தியுள்ளார்.

(25–26.03.2026) இடம்பெற்ற தனது இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, நாட்டின் கொள்கை வகுப்பாளர்களுக்கான இலங்கையின் முதலாவது பாலின சமத்துவ விபரத்திரட்டையும் அவர் வெளியிட்டு வைத்தார்.

அறிக்கையின் படி, மனித மேம்பாட்டில் உயர்ந்த நிலை பெற்றிருந்தாலும், பாலின சமத்துவத்தில் இலங்கை பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

2010ஆம் ஆண்டு உலகளாவிய பாலின இடைவெளி குறியீட்டில் 16வது இடத்தில் இருந்த இலங்கை, 2025ஆம் ஆண்டில் 130வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளதுடன், கடந்த 15 ஆண்டுகளில் 100க்கும் மேற்பட்ட இடங்களை இழந்துள்ளது.

இந்த ஆய்வில் பெண்களின் பொருளாதார மற்றும் அரசியல் பங்களிப்பு, கல்வி, சுகாதாரம், வறுமை, பாதுகாப்பு, பெண்களுக்கு எதிரான வன்முறைகள், காலநிலை மாற்ற பாதிப்புகள் மற்றும் சட்ட கட்டமைப்புகளில் உள்ள பாரபட்சங்கள் போன்றவை விரிவாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.

இந்த விஜயத்தின் போது, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள், வெளிநாட்டு தூதர்கள் மற்றும் தேசிய பெண்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுடன் கலந்துரையாடல்கள் நடைபெற்றன.

பெண்களுக்கு முதலீடு செய்வது நாட்டின் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கான முக்கிய சக்தி என வலியுறுத்தப்பட்டதுடன், பெண்களின் தலைமைத்துவம் மற்றும் பொருளாதார பங்களிப்பை மேம்படுத்த அரசாங்கம், சிவில் சமூகம் மற்றும் சர்வதேச அமைப்புகள் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என குறிப்பிடப்பட்டது.