தெற்கு அதிவேக நெடுஞ்சாலை விபத்து: மருத்துவ தம்பதியினரின் மனிதாபிமான மீட்பு நடவடிக்கை பாராட்டு.

185

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் தொடங்கொட மற்றும் வெலிப்பென்ன நுழைவாயில்களுக்கு இடையில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காக, அந்த வழியாகச் சென்ற மருத்துவ தம்பதியினர் மேற்கொண்ட மனிதாபிமான முயற்சி அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.

வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கொள்கலன் லொரியுடன் சிமெந்து ஏற்றிச் சென்ற வாகனம் மோதியதில் விபத்து ஏற்பட்டதாகவும், இதில் காயமடைந்த நால்வர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கம்பூருபிட்டிய ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவு மருத்துவர் மற்றும் அவரது கணவரான தெனியாய தேரங்கல ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடனடியாக செயல்பட்டு, சுமார் இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக தங்கி காயமடைந்தவர்களுக்கு அவசர சிகிச்சை வழங்கியுள்ளனர்.

டயர்கள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை ஏற்றிச் சென்ற கொள்கலன் லொரியின் பின்சக்கரம் காற்றிறங்கியதால் அது நிறுத்தப்பட்டிருந்த நிலையில், கட்டுப்பாட்டை இழந்த சிமெந்து வாகனம் பின்னால் மோதியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் வாகனங்களுக்குள் சிக்கியிருந்த நால்வரை மீட்க சுமார் மூன்று மணிநேரம் போராட வேண்டியிருந்ததுடன், சாரதிக்கு வாகனத்திற்குள்ளேயே ஒட்சிசன் வழங்கப்பட்டு மிக கவனமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தினால் நெடுஞ்சாலையின் ஒரு வழித்தடம் இரண்டு மணிநேரம் மூடப்பட்டதுடன், மீட்புப் பணிகளின் போது முழு வீதியும் சுமார் அரை மணிநேரம் மூடப்பட்டது. காயமடைந்தவர்கள் களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இந்த மனிதாபிமான செயல் பொதுமக்கள் மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.