கெசல்கமுவ ஆற்றில் மூழ்கிய மாணவன் உயிரிழப்பு: சடலம் இன்று மீட்பு.!

210

கெசல்கமுவ ஆற்றில் நீராடச் சென்றபோது நீரில் மூழ்கி காணாமல் போன பாடசாலை மாணவனின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 05) கண்டெடுக்கப்பட்டுள்ளது. நோர்வூட் பொலிஸாரின் தகவலின்படி, ‘சில்வர் வாலா’ எனப்படும் ஆழமான பகுதியில் இருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நேற்று சனிக்கிழமை (ஏப்ரல் 04) மாலை தனது நண்பர்கள் 11 பேருடன் காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு நீர் பாயும் கெசல்கமுவ ஆற்றில் நீராடிக் கொண்டிருந்த போது, குறித்த மாணவன் நீரில் மூழ்கி காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் நோர்வூட் பகுதியைச் சேர்ந்த, 11ஆம் தரத்தில் கல்வி பயின்று வந்த மாணவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். தேடுதல் நடவடிக்கைகளுக்காக கொழும்பு துறைமுக ரங்கல கடற்படை முகாமின் சுழியோடிகளின் உதவியும் பெறப்பட்டது.

மாணவனைத் தேடும் பணிகளில் நோர்வூட் பொலிஸாரும் பிரதேசவாசிகளும் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். ஆற்றின் ஆழம் காரணமாக கடற்படையினரின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் முடிவில் சடலம் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.