கட்டுநாயக்கில் 21 கோடி மதிப்பிலான குஷ் போதைப்பொருள்: கனடா நபர் கைது.!

200

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக சுமார் 21 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய குஷ் ரக போதைப்பொருளை கடத்திச் செல்ல முயன்ற வெளிநாட்டு பயணி ஒருவர் இன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 03) அதிகாலை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் 42 வயதுடைய கனடா நாட்டுப் பிரஜை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

விசாரணைகளின்படி, குறித்த நபர் தாய்லாந்தின் பெங்கொக் நகரில் இருந்து போதைப்பொருளை கொள்வனவு செய்து, ஹாங்கொங் ஊடாக ‘கதே பசிபிக்’ CX-611 விமானத்தில் அதிகாலை 12:30 மணியளவில் கட்டுநாயக்கவை வந்தடைந்துள்ளார். அவரின் இரண்டு பயணப் பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 21 கிலோகிராம் 779 கிராம் எடையுடைய குஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அதன் சந்தைப் பெறுமதி சுமார் 21 கோடியே 77 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேகநபர் மற்றும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் இன்று (ஏப்ரல் 03) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளது. தொடர்ந்து தடுப்புக்காவல் உத்தரவைப் பெற்று மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் தலைமையகத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.