ஈரான் பாலம் மீது அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல்; 8 பேர் பலி ; 95 பேர் காயம்.!!

206

ஈரானில் உள்ள மிகப்பெரிய பாலம் ஒன்றை அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்தி சேதப்படுத்தியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் நேற்று வியாழக்கிழமை (ஏப்ரல் 02) இடம்பெற்றதாகவும், இதில் 8 பேர் உயிரிழந்து சுமார் 95 பேர் காயமடைந்ததாகவும் ஈரான் அரச ஊடகம் அறிவித்துள்ளது.

ஐந்து வாரங்களாக நீடித்து வரும் மோதலை முடிவுக்கு கொண்டுவர உடன்படாவிட்டால் கடுமையான குண்டுவீச்சு தாக்குதல்கள் மேற்கொள்ளப்படும் என ட்ரம்ப் முன்பே எச்சரித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, தெஹ்ரான் மற்றும் கராஜ் நகரங்களை இணைக்கும் 136 மீட்டர் உயரமுள்ள, சுமார் 400 மில்லியன் டொலர் மதிப்புடைய புதிய பாலம் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. “இந்தப் பாலம் இனி பயன்படுத்த முடியாது; ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் மேலும் தாக்குதல்கள் தொடரும்” என ட்ரம்ப் தனது ட்ருத் சோஷியல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தாக்குதல் பிராந்தியத்தில் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. எதிர்காலத்தில் மேலும் இராணுவ நடவடிக்கைகள் தீவிரமடையக்கூடும் என்பதால், சர்வதேச அளவில் கவலைகள் எழுந்துள்ளன.