பாடசாலைகளில் உடல் தண்டனைக்கு தடை: கல்வி அமைச்சின் புதிய அறிவுறுத்தல்

82

பாடசாலைகளில் ஒழுக்கம் பேணப்படுவதில் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ள கல்வி அமைச்சு, மாணவர்களுக்கு எந்தவிதமான உடல் ரீதியான தண்டனையையோ அல்லது மன ரீதியான பாதிப்பையோ வழங்குவது கடுமையாகத் தடை செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு 2016 ஏப்ரல் 29ஆம் திகதியிட்ட 12/2016 இலக்க சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்ட வழிகாட்டல்களுக்கு மேலதிகமாக, மாணவர்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் உடனடியாக நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள சுற்றறிக்கையை செயல்படுத்தும்போது, வழக்கு எண் 461/2012 (FR) தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பின் 17வது பத்திக்கு விசேட கவனம் செலுத்த வேண்டும் என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

எந்த சூழ்நிலையிலும் மாணவர்கள் உடல் அல்லது மன ரீதியாக பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் பொறுப்பு கல்வியாளர்களுக்கும் பாடசாலை நிர்வாகிகளுக்கும் உள்ளது என்பதை அந்த தீர்ப்பு தெளிவாக வலியுறுத்துகிறது.

இதனை அடிப்படையாகக் கொண்டு, அனைத்து மட்டங்களிலும் உடல் தண்டனைகளுக்கு “பூஜ்ஜிய சகிப்புத்தன்மை” கொள்கை பின்பற்றப்பட வேண்டும் எனவும், விதிகளை மீறுவோர் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மாணவர்களின் பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் நல்வாழ்வை உறுதி செய்யும் வகையில், ஒழுக்கம் வன்முறையற்ற மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய முறைகளில் பேணப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கல்வி அதிகாரிகள் இந்த வழிகாட்டுதல்களை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்றும், மாணவர் ஒழுக்கத்தை கையாளும் போது உயர்நீதிமன்றத்தின் கருத்துக்களுக்கு விசேட கவனம் செலுத்த வேண்டும் என்றும் கல்வி அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.